< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
21 April 2023 8:53 AM GMT

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் சுகாதாரம், குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. இப்ராகிம் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ். ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் வேலாயுதம், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அடிப்படை வசதிகள்

கூட்டத்தில் சித்திரை திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தவும் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வரும் என்பதால் பாதுகாப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்து வருவாய் ஆர்.டி.ஓ. அனைத்து துறை அதிகரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தருவதாக பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

63 நாயன்மார்கள் திருவிழா

போலீஸ் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கிடவும், கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து அசம்பாவிதங்கள் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

வருகிற 27-ந்தேதி 63 நாயன்மார்கள் திருவிழா மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

திருவிழா நடைபெறும் நாட்களில் சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் சார்பில் உரிய பாதுகாப்பு மேற்கொள்ளவும் மின்சார துறை சார்பில் திருவிழா காலங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை சார்பில் திருவிழா காலங்களின் போதுமான சிறப்பு பஸ்கள் இயக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்