விருதுநகர்
ஆண்டாளுக்கு நாளை திருக்கல்யாணம்
|ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. இதையொட்டி திருப்பதியில் இருந்து மங்கலப்பொருட்களுடன் சீர்வரிசை வந்து சேர்ந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. இதையொட்டி திருப்பதியில் இருந்து மங்கலப்பொருட்களுடன் சீர்வரிசை வந்து சேர்ந்தது.
செப்புத்தேரோட்டம்
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள், ெரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்தனர்.
நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
திருக்கல்யாண விழா
மாலை 4 மணிக்கு பெரியாழ்வார் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தங்க பல்லக்கில் ஆண்டாள் அழைத்து வரப்படுகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதற்காக ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண மண்டபம் முன்பு பிரமாண்ட பந்தல் அமைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதா சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆண்டாளுக்கு பட்டுப்புடவை மற்றும் வஸ்திரம் மங்கலப் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.
கோவில் முன்பு மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த ெபாருட்கள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டன.