திருச்சி
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
|வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
லால்குடி:
லால்குடி அருகே அரியூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருமணமாகாதவர்கள் இரண்டு மாலையுடன் சென்று, திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டால், அவர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்நிலையில் இந்தாண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் மதியம் நடந்தது. முன்னதாக கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் அரியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் உள்பட கிராம மக்கள் செய்திருந்தனர். புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திருநெடுங்குளம், கிளியூர், பத்தாளபேட்டை, வாழவந்தான்கோட்டை ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு ஆடை மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கப்பட்டன.