< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
1 Nov 2022 12:01 AM IST

முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் மலைக்குன்றில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணியர் சுவாமி செட்டிகுளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்து, இரவு கோவில் முன்பு நடந்த சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவிலில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் சுவாமி, காமாட்சி அம்மன், விநாயகர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு முன்பாக உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

இதேபோல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக கோவிலுக்கு நேற்று மாலை பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்