< Back
மாநில செய்திகள்
ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா
விருதுநகர்
மாநில செய்திகள்

ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா

தினத்தந்தி
|
6 April 2023 1:14 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக செப்பு தேரோட்டமும் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக செப்பு தேரோட்டமும் நடந்தது.

திருக்கல்யாண விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ெரங்க மன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு ஆண்டாள், ெரங்க மன்னார் கோவிலில் இருந்து எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்க மன்னார் கீழ ரத வீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருளினர்.

செப்பு தேரோட்டம்

பின்னர் காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து நான்கு ரத வீதி வழியாக வந்து மீண்டும் செப்பு தேர் நிலையை அடைந்தது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டு மாட வீதிகள் வழியாக திருக்கல்யாணம் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு கன்னிகா தான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு இரவு 7 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண விழா தொடங்கியது.

சாமி தரிசனம்

வைதீக முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது, ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் வைபோகத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஆடிப்பூர மண்டபத்தில் திருக்கல்யாண விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களுக்கு மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண விருந்து கோவில் பிரகாரங்களில் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்