நாமக்கல்
திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில்பச்சை நிறம் கலந்த பட்டாணி அழிப்பு
|எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குமரவேல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேற்று தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டையாக வைத்தும், சில பாத்திரங்களில் பச்சை நிறம் கலந்த தண்ணீரில் பட்டாணிகள் ஊற வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பச்சை நிறம் கலந்த தண்ணீரை கீழே கொட்டினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பச்சை பட்டாணி கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை தோலுடன் விற்கப்படுகிறது. இதனால் குறைவான விலைக்கு பச்சை நிறம் கலந்த பட்டாணி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறம் கலந்த பச்சை பட்டாணி உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றனர். மேலும் நிறம் கலந்த பட்டாணிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பச்சை நிறம் கலந்த பட்டாணிகள் அழிக்கப்பட்டன.