கடலூர்
வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம்
|வடலூர் அருகே வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
வடலூர்,
இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
அந்த வகையில் 152-வது ஆண்டு தைப்பூச விழா கடந்த 5-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது.
பின்னர் 31-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, 5-ந்தேதி தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் 6 காலங்களில் நடந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள்
இதன் தொடர்ச்சியாக வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது. இங்குள்ள ஒரு அறைக்கு உள்ளே சென்ற வள்ளலார், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, அங்கு சித்தி பெற்றார். அந்த அறை திறக்கப்பட்டு, தீபம் காண்பிப்பதே திருஅறை தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்தில் நடந்த திருஅறை தரிசனத்துக்காக, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியை சத்திய ஞானசபையில் இருந்து பூக்களால் அலங்கரித்து காலை 6 மணிக்கு தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்பு
பல்லக்கை கருங்குழியை சேர்ந்த மீனவர் சமுகத்தினர் தங்கள் தோளில் சுமந்து சென்றனர். அப்போது வழியில் பாா்வதிபுரம் மக்கள் மற்றும் செங்கால் ஓடையில் நைனார்குப்பத்தை சோ்ந்தவா்களும் பழங்கள், பூக்கள் வைத்து வரவேற்றனா். பின்னா் கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட பிள்ளையார் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபாடு செய்த பெருமாள் கோவில், அவா் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊா்வலம் சென்றடைந்தது. அங்கு, கருங்குழி செம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர்கள் சீர்வரிசையுடன் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை வரவேற்று வழிபட்டனர்.
தொடர்ந்து, 11.30 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகையை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு பொதுமக்கள் பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்று வழிபட்டனர்.
திருஅறை தரிசனம்
இதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. சித்தி வளாக திருமாளிகையில் வள்ளலார் சித்திபெற்ற திருஅறையில் ஞான சபை பூசகர் தீபம்காண்பிக்க திருஅறை தரிசனம் நடைபெற்றது.
அப்போது, திருஅறை முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை, அருட் பெருஞ் ஜோதி என்ற மகாமந்திரத்தை உச்சரித்து, தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் சென்று திருஅறையை தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற்றது,
இதையொட்டி சன்மார்க்க சங்கத்தினர்கள் திரு அருட்பா சொற்பொழிவுகள், இசை நாடக நிகழ்ச்சிகளையும் நடத்தினர். மேலும் பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தின் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.