தர்மபுரி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்பணநாயகம் வெல்லும் சூழல் உள்ளதுதர்மபுரியில் டி.டி.வி. தினகரன் பேட்டி
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணநாயகம் வெல்லும் சூழல் உள்ளதாக தர்மபுரியில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
குக்கர் சின்னம்
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரனின் தாயார் காளியம்மாள் மறைவையொட்டி தர்மபுரியில் அவரது உருவப்படத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டு சென்றிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கான காலஅவகாசம் இல்லாததால் அந்த முயற்சியை தவிர்த்து விட்டோம். ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலை தற்போது தவறானவர்கள் கையில் இருக்கிறது. எனவே அந்த கட்சிக்கும் இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கும் ஆதரவு இல்லை. 90 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சி இது.
ஒன்றிணைய வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வெல்லும் சூழல் இருந்தால் அங்கு ஜனநாயகத்துக்கு இடமில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த விரும்பும் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அணியில் இணைந்து நாங்களும் பணியாற்ற முன்வருவோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை நடந்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோல தமிழகத்தில் மலிந்து கிடக்கும் போதை பொருட்களால் மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.
வரவேற்கிறோம்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும். அவர் பொறுப்பேற்று இருக்கும் துறைகளில் நடக்கும் ஊழல்களே இந்த அரசுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறது. தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை கவர்னர் ஆக்கியிருப்பதை வரவேற்கிறோம். அ.ம.மு.க. என்றைக்கும் அ.தி.மு.க.வாக செயல்பட வாய்ப்பில்லை. பேனா சின்னத்தை சொந்த நிதியில் கடல் அல்லாத இடத்தில் தி.மு.க. அரசு நிறுவினால் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், ஆட்சி மன்ற குழு தலைவர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.