ஈரோடு
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு;குறுகலான கொண்டை ஊசி வளைவுகள் அகலப்படுத்தப்படுமா?
|திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக கோவை, மைசூரூக்கும் விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் சரக்கு வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது.
தடை
வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்தன. வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். வனவிலங்குகள் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்,' என உத்தரவிட்டது.
மிகவும் குறுகலாக...
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது இதேபோல் சிறிய வாகனங்கள் இரவு 9 மணிக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் இரவில் நிகழும் போக்குவரத்து பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனினும் பகல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் 6-வது, 9-வது, 10-வது, 26-வது கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் குறுகலாக உள்ளது.
அகலப்படுத்த வேண்டும்
இந்த வளைவுகளில் லாரி போன்ற கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் நிற்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
எனவே திம்பம் மலைப்பாதையில் உள்ள மிகவும் குறுகிய வளைவுகளை அகலப்படுத்த வேண்டும் என அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், தாளவாடியை சேர்ந்த பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ராஜேஷ்
இதுகுறித்து தாளவாடியை சேர்ந்த பயணி ராஜேஷ் கூறுகையில், 'தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் திம்பம் மலைப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு தற்போது குறைந்திருந்தாலும் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்று விடும் லாரிகளால் சில நேரம் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே திம்பம் மலைப்பாதையில் குறுகலாக உள்ள கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்த வேண்டும்,' என்றார்.
குணசேகரன்
தாளவாடியை சேர்ந்த விவசாயி குணசேகரன் கூறுகையில், 'தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் மருத்துவமனை, கல்லூரி மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு கோவை, ஈரோடு, சேலம் சென்று வருவது வழக்கம். தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரத்தில் பஸ் இயக்கப்படாததால் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் விடிய விடிய காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இரவு நேர பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
பாலாஜி
வேன் டிரைவர் பாலாஜி என்பவர் கூறும்போது, 'திம்பம் மலைப்பாதையில் காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே வாகனங்கள் எளிதாக சென்று வர முன்கூட்டியே செல்ல வாகனங்களை அனுமதிக்க வேண்டும். மேலும் குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்தினால் வாகனங்கள் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பது தடுக்கப்படும்,' என்றார்.
சந்தோஷ்
வியாபாரி சந்தோஷ் கூறுகையில், 'தாளவாடி மலைப்பகுதியில் விளையும் காய்கறிகள் அனைத்தும் மாலை நேரத்தில் தான் சரக்கு வேனில் ஏற்றி கொண்டு செல்லப்படும். இரவு 9 மணிக்கு மேல் தடை இருப்பதால் காய்கறிகளை உரிய இடத்துக்கு உரிய நேரத்துக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இரவு 10 மணி வரை காய்கறி வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி திம்பம் மலைப்பாதையில் உள்ள குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. ஆனால் ஒரு சில குறுகிய கொண்ைட ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமல் நடுரோட்டில் நின்று விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஒரு சில குறுகிய கொண்டை ஊசி வளைவுகளில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது வாகன ஓட்டுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.