கடலூர்
தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்,
நான்முகத்துடன் தில்லை அம்மன்
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே அமைந்துள்ளது தில்லை காளியம்மன் கோவில். பிரம்மனை போல் நான்முகத்துடன் தில்லை அம்மனும், ஆக்ரோஷமாக தில்லை காளியம்மனும் இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.
இப்படி பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
இதையடுத்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 1-ந்தேதி யாக சாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. 2-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் 4, 5, 6-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாடு
கும்பாபிஷேக நாளான நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை, மகா தீபாராதனை மற்றும் யாத்ராதானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடம் புறப்பட்டு ஊர்வலமாக கோவில் ராஜகோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு பொதுத்தீட்சிதர்கள் கோவில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
தொடர்ந்து தில்லை அம்மன், சபரிவாரஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சிறப்பு பூஜை
பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்தானியர்கள் தில்லை.நடராஜன், தில்லை. நாயகன், செந்தில்குமார், தீட்சிதர்கள் கணேஷ், ராஜ்குமார், சக்தி கண்ணன், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், அரியலூர் இணை ஆணையர் நாகராஜன், சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாள், செயல் அலுவலர்கள் ராஜா சரவணகுமார், வெங்கடகிருஷ்ணன், சிவகுமார், சீனிவாசன், ராஜ்குமார், வேல்விழி, சரண்யா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ,துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.