கடலூர்
விநாயகர் கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
|கடலூரில் விநாயகர் கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் கோண்டூர் டி.என்.சி.எஸ்.சி. நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு பதறிய அவர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களையும் காணவில்லை. உடனே அவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பித்தளை பொருட்களை திருடியதுடன், உண்டியலை தூக்கிச் சென்றது தெரியவந்தது. கடந்த ஓராண்டாக உண்டியல் திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.