சென்னை
வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்
|கிண்டியில் வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கோவையில் மடக்கி பிடித்தனர்.
சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் சொர்ணாதேவி. இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது. இதை அறிந்த 2 பேர் கடந்த 31-ந்தேதி இவரிடம் வீடு வாடகைக்கு கேட்டு வந்து உள்ளனர். அப்போது திடீரென வீட்டின் அறைக்குள் மூதாட்டியை தள்ளி கத்தியை காட்டி மிரட்டி, அவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் என 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர். பின்னர் மூதாட்டியின் காலில் விழுந்து பணத்தேவைக்காக கொள்ளை அடிப்பதாக கூறி பாவமன்னிப்பு கேட்டு விட்டு வெளி தாழ்பாள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளில் பதிவான உருவத்தை வைத்து விசாரித்த போது, கொள்ளையர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது கோவையை சேர்ந்த அஜீத் (வயது 25), பிரபு (32) என தெரியவந்தது. மேலும் விசாரணையில் கொள்ளையர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். அதில், கொள்ளையன் அஜீத்தின் அம்மா காசநோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்துவருவதும், பி.பாம் பட்டதாரியான இவருக்கு போதிய வருமானம் கிட்டாத நிலையில் அவரது அம்மாவின் மருத்துவ செலவிற்காக கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
கொள்ளை சம்பவத்தில் தன்னுடைய நண்பரான பிரபுவையும் துணைக்கு அழைத்து கொண்டு உள்ளூரில் கொள்ளை அடித்தால் சிக்கி கொள்வோம் என திட்டமிட்டு சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கல் பகுதியை கொள்ளை சம்பவத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக கடந்த 15 நாட்களாக அப்பகுதியில் நோட்டம் விட்டு மூதாட்டி வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அஜீத்க்கு திருமணமாகி 10 மாத குழந்தை உள்ளதாகவும் தெரியவந்தது. அம்மாவின் மருத்துவ செலவிற்காக குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து தற்போது போலீசாரிடம் சிக்கி கொண்ட இருவரிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.