< Back
மாநில செய்திகள்
நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கடலூர்
மாநில செய்திகள்

நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலி,

நெய்வேலி அடுத்த வடக்குத்து காமராஜர் நகரில் வசித்து வருபவர் வேலு(வயது 66). ஓய்வுபெற்ற தாசில்தார். இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் சிகிச்சையை முடித்து விட்டு நேற்று முன்தினம் மாலை வேலுவும், அவரது மனைவியும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவும் திறந்து கிடந்தது.

நகைகள் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ¾ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபா்களின் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்