சென்னை
பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
|பரமங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவர், ஆந்திராவில் திருந்தி வாழ்வதாக கூறிவிட்டு சென்னையில் கைவரிசை காட்டியது தெரிந்தது.
சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ஓம்சக்தி (வயது 41). இவர், சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் பதிவான கைரேகை பதிவுகளை கொண்டு பழைய குற்றவாளிகள் பட்டியலில் தேடினர்.
அந்த கைரேகைகளை, ஆந்திர மாநில போலீசாருக்கும் அனுப்பி வைத்தனர். அதில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரலு (42) என்பவரது கைரேகையுடன் அது ஒத்துபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கர்னூல் சென்று வெங்கடேஸ்வரலுவை கைது செய்தனர்.
விசாரணையில் ஆந்திர மாநில பழைய குற்றவாளியான வெங்கடேஸ்வரலு, தான் திருந்தி வாழ்வதாக கூறி அந்த மாநில போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு, அங்குள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
எழுதி கொடுத்தபடி ஆந்திராவில் திருட்டை நிறுத்திவிட்ட அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வந்து கடந்த 4 ஆண்டுகளாக கைவரிசை காட்டியது தெரியவந்தது.
மேலும் திருட்டு நகைகளை கர்னூலில் உள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் அடகு வைத்ததாக கூறினார். ஆனால் அதற்கான ரசீது அவரிடம் இல்லை. மேலும் விசாரணையில் அந்த அடகு நிறுவன மேலாளர் புஷ் ரெட்டி (36), நகை மதிப்பீட்டாளர் அய்யனார் (35) ஆகியோர் திருட்டு நகை என தெரிந்து பாதி விலைக்கு வெங்கடேஸ்வரலுவிடம் இருந்து வாங்கி வெளியே விற்றது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையன் வெங்கடேஸ்வரலுக்கு உடந்தையாக இருந்ததாக அடகு நிறுவன மேலாளர் புஷ் ரெட்டி, ஊழியர் அய்யனார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 125 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.