விழுப்புரம்
பிரச்சினையை திசை திருப்பவே மதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்
|தமிழகத்தில் விலைவாசி, மின்கட்டண உயர்வு பிரச்சினையை திசை திருப்பவே மதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள் பா ஜ க மாநில துணைத்தலைவர் சம்பத் பேட்டி
விழுப்புரம்
பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் 1½ ஆண்டுகள் உருண்டோடி விட்டது, அதற்காக என்ன செய்தார் என்றே தெரியவில்லை.
தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் ஈசி என்கிறார்கள். இதுபோன்று அவதூறான வார்த்தைகளை உச்சரிக்கக்கூடாது என்று ஸ்டாலின், தனது சகாக்களுக்கு கட்டளையிட வேண்டும். அவர் கண்டிக்கத்தவறினால் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள். அது தேர்தலாக இருக்கலாம் அல்லது போராட்டமாகவும் இருக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம். சுதந்திரத்திற்கு முன்பு எதை சொன்னார்களோ அதைத்தான் இன்றும் சொல்கிறார்கள். எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியை ஸ்டாலினே தொடங்கி வைப்பார். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு பிரச்சினையை திசை திருப்பவே மதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் அவரது மகன் என்ற முறையில் நான் கலந்துகொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசன், பட்டியல் அணி மாநில செயலாளர் மணிபாலன், மாவட்ட துணைத்தலைவர் குபேரன், செயலாளர் லோகநாதன், தாஸசத்யன் உள்பட பலர் உடனிருந்தனர்.