அரிசி, நெல்மணியில் 'அ' எழுதி மகிழ்ந்தனர்: கோவில்கள், பள்ளிகளில் எழுத்தறிவிக்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி
|கோவில்கள், பள்ளிகளில் எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குழந்தைகளுடன் கலந்துகொண்ட பெற்றோர் அரிசி, நெல்மணியில் ‘அ' எழுத வைத்து மகிழ்ந்தனர்.
சென்னை,
ஆயுத பூஜைக்கு மறுநாளான விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் சிறந்த கல்வியை பெற முடியும் என நம்பப்படுகிறது. அதன்படி, விஜயதசமி தினத்தன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி கோவில்கள், பள்ளிகளில் எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
தற்போது நோய்த்தொற்று குறைந்திருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோவில்கள் மற்றும் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடத்தப்பட்டது.
'அ' எழுதி மகிழ்ந்தனர்
பெற்றோர் தங்கள் குழந்தைகளை கோவில்கள் மற்றும் பள்ளிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்தனர். குறிப்பாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முதலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பெற்றோர் மடியில் குழந்தைகளை அமரச் செய்து, தட்டில் அரிசி கொட்டி, அதில் தங்கள் தாய்மொழியை சுட்டுவிரலை பிடித்து எழுத வைத்து மகிழ்ந்தனர். பெரும்பாலும் 'அ' என்ற எழுத்தையே எழுதினர். சிலர் 'ஹரி ஸ்ரீ கணபதயே நம', 'ஓம்' என்ற வார்த்தையையும் எழுதியதை பார்க்க முடிந்தது.
பின்னர், தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் எழுதும் நிகழ்ச்சியும் நடந்தது. கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பள்ளிகளில்...
இதேபோல், சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில் கல்வியை தொடங்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சில கோவில்களில் குழந்தைகளின் சுட்டு விரலை பிடித்தும், சில கோவில்களில் மஞ்சளை பிடித்தும் 'அ' எழுத வைத்தனர்.
கோவில்களை போல, அங்கன்வாடிகள், பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஆசிரியர்கள் பள்ளிகளில் சேரவரும் குழந்தைகளை மடியில் அமர வைத்து தாய்மொழியாம் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுத வைத்து அனுப்பினர். அவ்வாறு பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, கலைநிகழ்ச்சிகளை நடத்தியும் பள்ளிகள் சிறப்பு செய்தன.
வழக்கம்போல, பள்ளிக்கூடம் என்றதுமே சில குழந்தைகளுக்கு கண்ணீர் தாரை தாரையாக வரும். அந்தவகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் தேம்பி தேம்பி அழுதபடி, அரிசியில் 'அ' எழுத்தை கோலமிட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, பள்ளிகளில் சேர்த்தனர். தனியார் பள்ளிகளை போன்று, அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது.