கரூர்
ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
|கரூர் அருகே ஆசிரியரின் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை, பணம் திருட்டு
கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதிக்குட்பட்ட அர்ச்சனா நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 43). இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அலமாரி மற்றும் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த 10¾ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.