சென்னை
அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் 5 கடைகளில் துணிகர கொள்ளை - செல்போன்களை அள்ளிச்சென்றனர்
|அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் மர்மநபர்கள் 5 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள், லேப்டாப் போன்ற பொருட்களை அள்ளிச்சென்றனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் ஏராளமான செல்போன் விற்பனை கடைகள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள் உள்ளன. இந்த தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதும்.
நேற்று காலையில் வியாபாரிகள் வழக்கம்போல கடைகளை திறந்தனர். அப்போது அதிர்ச்சி தரும் வகையில் 5 செல்போன் கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைகளில் இருந்த செல்போன்கள் மற்றும் பொருட்கள், லேப்டாப்கள், ஹெட்போன்கள் போன்றவற்றை கொள்ளையர்கள் மூட்டை கட்டி அள்ளிச்சென்று விட்டனர். கொள்ளை போன செல்போன்கள் மற்றும் பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும். இதுபற்றி கடைக்காரர்கள் கொடுத்த புகார் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, 3 கொள்ளையர்கள் வந்து கடைகளை உடைத்து கொள்ளை அடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.