கள்ளக்குறிச்சி
கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வி.சி.க.வினா் தா்ணா
|கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வி.சி.க.வினா் தா்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியல்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூா் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கடந்த 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் கொடிக்கம்பம் நடப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர், 2 நாட்களில் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் நேற்று கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனா். பின்னா் அவா்கள், கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறி, முன்னாள் மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் மண்டல துணைச்செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், போலீஸ் நிலையத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், ஆலத்தூர் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.