பெரியாருக்கு மரியாதை செலுத்திய ஈபிஎஸ்.. ஓபிஎஸ் வருவதற்குள் புகைப்படத்தை கையோடு எடுத்துச்சென்ற ஈபிஎஸ் தரப்பு..!
|பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
பெரியார் பிறந்த நாளான இன்று (செப்.17) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.
பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். அப்போது சிலையின் கீழ் ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தி விட்டு சென்ற பிறகு கையோடு பெரியார் படத்தையும் அதிமுகவினர் கொண்டு சென்று விட்டார்கள்.
அதைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் வர உள்ள நிலையில் மற்றொரு பெரியார் புகைப்படம் அவருடைய சிலையை அருகே வைக்கப்பட்டுள்ளது.