நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால் நெருக்கடி கொடுக்கிறார்கள் -சீமான் குற்றச்சாட்டு
|நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என்பதால், ‘லியோ’ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சீமான் குற்றம்சாட்டினார்.
நாமக்கல்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.
ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
'லியோ' திரைப்படம்
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சினைதான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்யமுடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.