பெரம்பலூர்
மாரியம்மன், முருகன் கோவில்களில் தேரோட்டம்
|வேப்பந்தட்டை அருகே மாரியம்மன், முருகன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் சோலை நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி மங்கள இசையுடன் அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை சென்றடைந்தது. இதில் சோலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கை.களத்தூர் ஊராட்சி சிறுநிலாவில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா! அரோகரா! என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.