< Back
மாநில செய்திகள்
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

தினத்தந்தி
|
9 March 2023 1:45 AM IST

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

பழனியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 28-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து 4.30 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்று, தேரோட்டம் தொடங்கியது.

பக்தர்கள் பரவசம்

பழனி நகரின் நான்கு ரத வீதியில் தேர் சுற்றி வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஓம் சக்தி, பராசக்தி... மாரியம்மா தாயே என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், பழனி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், புஷ்பலதா கார்த்திகேயன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்