டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் 'மெட்ராஸ் ஐ' இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
|'மெட்ராஸ் ஐ' காரணமாக கண் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது.
இந்த நிலையில், 'மெட்ராஸ் ஐ' பரவல் குறித்து சென்னை, எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறி ஆகும். குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும்.
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் 'மெட்ராஸ் ஐ' இருக்காது.
தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 1.50 பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மை கொண்டதால் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.