உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்காது - கி.வீரமணி பரபரப்பு பேட்டி
|உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்காது என கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி புத்தூர் பகுதியில் திராவிடர் கழக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கி. வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-
திராவிட மாடல் ஆட்சியில் 50 சதவீதம் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது அதை செய்தது நம்முடைய முதல்வர் ஸ்டாலின் தான். பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது என்பது ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கை.
பெண்கள் உலகத்தில் செல்லவேண்டிய தூரம் ஏராளம் இருக்கிறது. திராவிட இயக்கங்கள் நடைபெறக்கூடிய சமூக அநீதிகளை சுட்டிக்காட்ட வேண்டும். தற்போது திருச்சியில் நடைபெறக்கூடிய கருத்தரங்கத்தில் வழக்கறிஞர்கள், டாக்டர்கள் இது போன்று பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
பெண்களுக்கு என்று முக்கிய தீர்மானங்கள் இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்பது என்ன என்பதை தெளிவாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணடிமை பெண்களை வீட்டிலேயே முடக்கி வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் நீக்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். திராவிட இயக்கங்களில் ஆதினம் கிடையாது.
குறிப்பாக சூத்திரர்கள் சன்னியாசியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது. அதனால் எந்த சந்நியாசியும் பேசமுடியாது. சங்கராச்சாரியார் மட்டும்தான் தப்ப முடியும்.
திமுக ஒருபோதும் பின்வாங்காது. அப்படியே பின் வாங்கினால் அது பாய்வதற்காக தான். அது புலியை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் புலியை பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.