அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
|அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருகிறது. திமுகவுக்கு வாக்களித்த மக்கள் எல்லோரும் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணிக் கொண்டு உள்ளனர். சொத்து வரி உயர்வுடன், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்துதான் எடப்பாடி பழனிசாமி உத்திரவின்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை. மக்கள் நிம்மதியாக இருந்தனர். இலவச பேருந்து என்று சொல்லிவிட்டு பாதி பேருந்தை நிறுத்தி விட்டார்கள். இதுதான் திமுக அரசின் சாதனை. இனி பேருந்து கட்டணமும் உயர்த்தப் போகிறார்கள்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து 40 பேரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.