திருச்சி
பணியில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
|பணியில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி தாலுகா, ஏவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் அருகே காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சும் மோட்டாருடன் கூடிய புதிய வட்டக்கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இதையறிந்த கோட்டூர் கிராம மக்கள் நேற்று வட்டக்கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு கிராமத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காவிரி ஆற்றில் வட்டக்கிணறு கட்டப்பட்டு உறிஞ்சப்படும் நீரினால் வருங்காலத்தில் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். எனவே காவிரி ஆற்றில் வட்டக்கிணறு கட்டுவதை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.