அரியலூர்
ரேஷன் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு
|தா.பழூர் அருகே ரேஷன் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கடை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியை சேர்ந்த கோடாலி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டது. இரண்டு சமூக பிரிவினர் அந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர். இந்தநிலையில் அந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் அதே இடத்தில் ரேஷன் கடை அமைத்தால் ரேஷன் பொருட்களை வாங்க மாட்டோம் என்றும் இரு தரப்பினருக்கும் பொதுவான இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் தங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைக்கு தங்களது இடத்தை கொடுத்து கட்டிடம் கட்ட சொன்னோம். ஆனால் அப்பொழுது மற்றொரு தரப்பினர் கட்டிடம் கட்ட இடம் தரவில்லை. எனவே ஏற்கனவே ரேஷன் கடை இருக்கும் இடத்தில் தான் கடை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் நேற்று திடீரென்று ஒரு தரப்பினர் தங்களது ரேஷன் கார்டை அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து ரேஷன் கடையை நோக்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.