< Back
மாநில செய்திகள்
கோவில் பிரசாதம் வாங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரபரப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோவில் பிரசாதம் வாங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 Jun 2023 6:18 PM GMT

கோவில் பிரசாதம் வாங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவுடையார்கோவில், ஜூன்.13-

ஆவுடையார்கோவில் அருகே குண்டகவயல் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தன. இந்நிலையில், பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்ச்சியும், தீமிதி விழாவும் நடைபெற்றது. 10-வது மண்டகப்படியில் உரிமை கோருவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை எழுந்தது. குண்டகவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் மண்டகப்படி பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, மற்றொரு தரப்பினரை மண்டகப்படியில் சேர்க்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினரையும், அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துக்குமரன் மற்றும் குண்டகவயல் கிராமத்தார்கள் கலந்துகொண்ட நிலையில் 10-வது மண்டகப்படியில் மற்றொரு சமூகத்தினரையும் சேர்த்து வழிபடவும், அவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்கவும் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று 10-வது மண்டகப்படியில் இரு சமூகத்தினரும் இணைந்து வழிபட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே மண்டகப்படி பிரசாதம் வாங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் எழுத்தர் வடிவேல் பிரசாதத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்