மதுபாட்டிலில் பிளாஸ்டிக் துண்டுகள், இறந்த புழுக்கள் இருந்ததால் பரபரப்பு
|மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் இருந்துள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் நேற்று மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் பாட்டிலை திரும்ப பெறுவதிலேயே அவர் குறியாக இருந்துள்ளார்.
இதனால் அந்த பாட்டிலுடன் மதுப்பிரியர் நேரடியாக போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்க சென்றார். ஆனால் இந்த புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக்கூறி அவரை போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் அந்த பாட்டிலை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். இதை பார்த்த மற்ற மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.