நீலகிரி
கேக்கில் எலியின் எச்சம் கிடந்ததால் பரபரப்பு
|கூடலூர் பேக்கரியில் விற்பனை செய்த கேக்கில் எலியின் எச்சம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடையில் கேக் வாங்கி சென்றார். பின்னர் வீட்டுக்கு சென்று திறந்து பார்த்தபோது, கேக்கில் எலியின் எச்சம் கிடந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்கு செல்போன் மூலம் தெரிவித்து விட்டு கேக்கை பயன்படுத்தாமல் வெளியே வீசினார். இந்தநிலையில் நேற்று கார்த்திகா அதே பேக்கரி கடைக்கு சென்று மீண்டும் கேக் மற்றும் சாக்லேட்டுகள் வாங்கி சென்றார். முன்னதாக எலியின் எச்சம் இருப்பது குறித்து கடை ஊழியர்களிடம் கூறினார். தற்போது நல்ல கேக் உள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது எலி எச்சம் கேக்கில் ஒட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கார்த்திகா கூறும்போது, கேக்கில் எலி எச்சர் இருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.