திருச்சி
பிறந்த குழந்தையை கட்டைப்பையில் வைத்துச்சென்றதால் பரபரப்பு
|பிறந்த குழந்தையை கட்டைப்பையில் வைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண் குழந்தை
திருச்சி மாவட்டம், குழுமணியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வளைவு அருகில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கட்டைப்பையை யாரோ மர்ம நபர்கள் வைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, மருத்துவ பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த கட்டைப்பையில் துணி சுற்றப்பட்டு, பிறந்து 24 மணி நேரமேயான ஆண் குழந்தை இருந்துள்ளது. உடனே அந்த குழந்தையை மீட்டு, டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை செய்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் அந்த குழந்தையை சேர்த்தனர். அங்கு குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார், பெற்ற குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாய் அங்கு விட்டுச்சென்றாரா?, இதற்கு கள்ளக்காதல் காரணமா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.