கள்ளக்குறிச்சி
ஒருவழிப்பாதையில் வந்த பஸ்சால் கடும் போக்குவரத்து நெரிசல்
|கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நுழைவு வாயில் ஒருவழிப்பாதையில் வந்த பஸ்சால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி நகர மைய பகுதியில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால் தினசாி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் துருகம் சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு வந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு கச்சேரி சாலையில் உள்ள நுழைவுவாயில் வழியாக செல்வது வழக்கம். பஸ்கள் வெளியில் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் பூ, பழம் உள்ளிட்ட பொருட்களை விற்பதால் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 4.35 மணியளவில் அரசு பஸ் பயணிகளுடன், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த சமயத்தில் டிரைவர் ஒருவர், விதிமுறைகளை மீறி எதிரே ஒருவழிப்பாதையில் மினிபஸ்சை பஸ் நிலையத்துக்குள் ஓட்டிவந்தார். அப்போது நேருக்குநோ் வந்த 2 பஸ்களும், அங்கிருந்து ஒதுங்கி செல்ல முடியாமல் நடுவழியில் நின்றது.
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 20 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டதும், 2 பஸ்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் வௌியே செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கச்சோி சாலையில் இருந்து பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியாமலும் பரிதவித்தனர். ஆகவே கள்ளக்குறிச்சி நகரில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும், வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.