செங்கல்பட்டு
ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்ற பஸ்சின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
|ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்ற பஸ்சின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது .
தாம்பரத்தில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உத்திரமேரூர் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது திடீரென பஸ்சின் பின் பக்க டயர் கழன்று சாலையில் உருண்டு ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாமர்த்தியமாக பஸ் டிரைவர் பிரேக் பிடித்ததால் பஸ் பயணிகளுடன் சாலையில் அப்படியே நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் உள்பட 8 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பஸ்சில் இருந்த அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு மாற்று பஸ்சில் அவரவர் செல்லும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்த 8 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் பின்பக்க டயர் கழன்று ஓடிய சம்பவத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாததால் பொதுமக்கள், பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடுரோட்டில் நின்ற பஸ்சை கிரேன் மூலம் தூக்கி சாலையோரமாக நிறுத்தினர். இதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.