கள்ளக்குறிச்சி
வெடி மருந்து கிடந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு
|கனியாமூர் சக்தி பள்ளியில் சீரமைப்பு பணியின்போது வெடி மருந்து கிடந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17.7.2022 அன்று நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை மறுசீரமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பள்ளி விடுதி அறையை தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது சமையல் அறை பகுதியில் கருப்பு நிறத்தில் கிடந்த துகள்களை பார்த்த தொழிலாளர்கள், அதனை வெடி மருந்து என நினைத்து அங்கிருந்து அலறி அடித்து ஓடினர்.
காட்டுத்தீ போல் பரவியது
இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சின்னசேலம் போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படியாக கிடந்த பொருளை ஆய்வு செய்தனர். அப்போது அது வெடி மருந்து இல்லை என்பதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் என்பதும் தெரியவந்தது.
இது பற்றி பொதுமக்களிடம், பள்ளி வகுப்பறையில் வெடி மருந்து எதுவும் இல்லை. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என தெரிவித்தனர். அதன் பின்னரே சின்னசேலம் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் அடங்கியது.