
திருச்சி
குப்பைக்கு வைத்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு

குப்பைக்கு வைத்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இறைச்சி மார்க்கெட்
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தின் பின்பகுதியில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வந்த தெர்மாகோல் பெட்டிகள், அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மார்க்கெட் வளாகத்தில் சேகரமான குப்பைகள் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டி வைப்பது வழக்கம்.
குப்பைகள் அதிகமாக குவிந்ததையடுத்து தீ வைத்து எரிக்க மாநகராட்சி ஊழியர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அந்த குப்பைக்கு நேற்று மாலை தீ வைத்தனர்.
கரும்புகை
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் தீ மள, மளவென பரவியது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் கழிவுகள் அதிகம் இருந்ததாலும், வெயிலுக்கு அங்கிருந்த செடி, கொடிகள் காய்ந்து இருந்ததாலும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மேலும் அதில் இருந்து வெளியான கரும்புகை சுமார் 50 அடி உயரத்துக்கு மேல் எழுந்தது. இந்த கரும்புகை கண்டோன்மெண்ட் பகுதி வரை தெரிந்தது. உடனே பொதுமக்களும், மாநகராட்சி பணியாளர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருச்சி உதவி மாவட்ட அலுவலர் (நிலையம்) சத்தியவர்த்தன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் குமரவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் அரை மணி நேரம் போராடி தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ மார்க்கெட்டில் இருந்த கடைகளுக்கு பரவவில்லை. அதற்கு முன்பாகவே தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.