திருச்சி
ஓடும் பஸ்சில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
|ஓடும் பஸ்சில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓடும் பஸ்சில் தீ
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று மாலை கொப்பம்பட்டியில் இருந்து முருங்கப்பட்டிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் ஒட்டம்பட்டியை சேர்ந்த பிரகாஷ்(வயது 35) ஓட்டினார். அந்த பஸ்சில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பயணம் செய்தனர்.
செட்டிக்காடு அருகே சென்றபோது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து கரும்புகை வருவதை கவனித்த டிரைவர் பிரகாஷ், உடனடியாக பஸ்சை நிறுத்தினார். மேலும் புகை வருவதை கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
சிதறி ஓடினர்
இதையடுத்து பஸ்சின் டீசல் டேங்க் அருகேயிருந்து புகை வருவதை கண்டு, தீயை அணைக்க அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றியதாக தெரிகிறது. ஆனால் தீ மேலும் பரவியதால், டீசல் டேங்க் வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். அந்த பஸ் நின்ற இடம் வனப்பகுதி என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் பஸ் முழுவதும் மளமளவென தீ பரவி ெகாழுந்துவிட்டு எரிந்தது.
இது குறித்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள், லால்குடி நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுஷியா, உதவி அலுவலர் லியோஜோசப், உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.
போலீசார் விசாரணை
பஸ்சின் டீசல் டேங்க் உடைந்து விழுந்து, வழிநெடுக டீசல் ஒழுகியபடி சென்றதாகவும், தரையில் தேய்த்துக் கொண்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பஸ்சில் தீப்பற்றியது சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டதால், அதில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பஸ் தீப்பற்றி எரிந்தபோது அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. இதனால் இந்த விபத்து பற்றி அறிந்த சுற்றியுள்ள கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.