செங்கல்பட்டு
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி மையம் எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் நேற்று திடீரென செடி, கொடிகள், மரங்கள் கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் ஓட்டேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கு இடையே காப்புக்காடு பகுதியில் மரம், செடி, கொடிகள் எரியும்போது பலத்த காற்று வீசியதால் தீ மேலும் வேகமாக பரவியது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல சமூகவிரோதிகள் யாராவது காட்டுக்கு தீ வைத்தார்களா? என்று வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.