விருதுநகர்
ரேஷன் கார்டு வழங்குவோம் என்ற நிபந்தனை கூடாது
|கியாஸ் இணைப்பு இருந்தால் தான் ரேஷன் கார்டு வழங்குவோம் என்ற நிபந்தனை கூடாது என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கியாஸ் இணைப்பு இருந்தால் தான் ரேஷன் கார்டு வழங்குவோம் என்ற நிபந்தனை கூடாது என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ரேஷன் கார்டு
விருதுநகர் தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிதாக தனி குடித்தனம் செல்பவர்கள் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஏழை, எளிய குடும்பத்தினர் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து அனுப்பும்போது சீர்வரிசை தான் கொடுக்க முடியுமே தவிர கியாஸ் சிலிண்டர் இணைப்பு எல்லாம் பெற்றுக் கொடுக்க வாய்ப்பு இல்லை.
எனவே தனிக்குடித்தனம் செல்வோர் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே இந்த நிபந்தனையை தளர்த்தி ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை தாலுகா சிவலிங்காபுரம் வடகரை பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினர் தங்கள் பகுதியில் 50 குடும்பத்தினர் உள்ளதாகவும், அனைவரும் வீடு இல்லாத நிலையில் சிரமப்படுவதாகவும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமெனக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மின் உற்பத்தி நிலையம்
பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், மண்டல தலைவர் நாகராஜன் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- அருப்புக்கோட்டை தாலுகாவில் ஓ.மீனாட்சிபுரம், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் 63 ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பில் தனியார் நிறுவனம் சோளார் மின்உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் உற்பத்தி நிலையத்திலிருந்து துணை மின் நிலையத்திற்கு விவசாய நிலத்தின் வழியாக மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு போக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு தண்டுவட பாதிப்புற்றோர் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட பொறுப்பாளர் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு இலவச வீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.