
திருவாரூர்
விளக்குடி பாலம் அருகே வேகத்தடை வேண்டும்

திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் விளக்குடி பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் விளக்குடி பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலாத்தலம்
திருத்துறைப்பூண்டி நகரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் விளக்குடி உள்ளது. பெங்களூரு, கிருஷ்ணகிரி வழியாக வரும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் இந்த பாதை வழியாகத்தான் திருத்துறைப்பூண்டியை கடந்து சுற்றுலா தலங்களான நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
மேலும் வேதாரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த வழியாகத்தான் திருச்சி, தஞ்சைக்கு செல்ல வேண்டும்.
பரபரப்பாக காணப்படும் திருத்துறைப்பூண்டி சாலையில் விளக்குடி பாலம் அருகே ஒரே இடத்தில் வளைவுகள் உள்ளன.
இதனால் இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்க விளக்குடி பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தும் வளைவுகள்
இது குறித்து விளக்குடியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
கோடியக்கரை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் இந்த திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலை வழியாக சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை இரவு மற்றும் பகல் என எந்த நேரத்திலும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் விளக்குடி என்ற பகுதியில் வளைவுகள் உள்ளன.
இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே விபத்துக்களை தடுக்கும் பொருட்டு இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி மேற்கண்ட இடத்தில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.