விழுப்புரம்
போலி மதுபான விற்பனையில் ஊழல் செய்தது குறித்து நீதி விசாரணை வேண்டும்
|போலி மதுபான விற்பனையில் ஊழல் செய்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்
விழுப்புரம்
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனை, ஊழல் முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை நடத்தும் தி.மு.க. ஆட்சியை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
இதற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ரவுடியிசம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டத்தின் ஆட்சி இங்கு நடைபெறவில்லை.
தமிழகத்தில் தற்போது ரவுடியிசம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. செந்தில்பாலாஜியின் தூண்டுதலின்பேரில் அதிகாரிகளை தாக்குகிறார்கள். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் படித்த இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்கள். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்கவில்லை.
பெருகி வரும் கள்ளச்சாராயம்
கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையை தடுக்கக்கோரி நாங்கள் 2 ஆண்டுகளாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்காது. காவல்துறை தி.மு.க.வின் தொண்டர் படையாக மாறிவிட்டதால் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அனுமதியில்லாத பார்களில் விற்கப்பட்ட பிராந்தி பாட்டில்கள் அனைத்தும் போலி மதுபானங்கள் தான். போலி மதுபான விற்பனையில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்து வரி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். மத்திய புலனாய்வுத்துறையும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை விட்டு நீக்கி அவரை கைது செய்ய வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பொய்யாக இருந்தால் வழக்கு போட வேண்டியதுதானே, ஏன் வழக்கு போடவில்லை? ஏனென்றால் அது உண்மை.
பாதுகாப்பு இல்லை
தி.மு.க. அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஏன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர்கள் அற்புதவேல், பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, எசாலம் பன்னீர், புலியனூர் விஜயன், நடராஜன், வளவனூர் நகர செயலாளர் முருகவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிரஸ்குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், பொருளாளர் ரகுநாதன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இயக்குனர் தனுசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோல்டுசேகர், வளவனூர் முன்னாள் நகர செயலாளர் காசிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தினால் நகரில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.வின் 1,209 ேபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.