நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
|சினிமா துறை ரொம்ப கஷ்டப்படுகிறது என்று நடிகர் விஷால் கூறினார்.
கடலூர்,
கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும், இந்த அரசும் அப்படிதான் செய்கிறது.
சினிமா துறை ரொம்ப கஷ்டப்படுகிறது. சினிமா துறைக்கு இந்த ஆண்டு கடினமான வருடமாக இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. 10 பெரிய படங்கள் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான தியேட்டர்களை அவர்கள் இப்போதே எடுத்து விட்டார்கள். இதற்கிடையில் சிறிய படங்கள் எப்படி திரைக்கு வரும் என்று கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு வியாபார ரீதியில் சினிமா துறைக்கு கஷ்டமான நிலைமைதான்.
தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் சினிமா துறையில் இருந்து கருத்துகள் வருவதாக கேட்கிறீர்கள். அரசுக்கு எதிராக அல்ல. அரசு ஏன் சினிமாவுக்கு வருகிறது. போன அரசு சினிமாவுக்கு வரவே இல்லையே, அரசு சினிமாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அரசு அவர் துறையை கவனித்தால் போதும். சினிமா துறை, சினிமா துறையாக இருந்தால் போதும்.
சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. நேரடியாக அரசியல் களத்தில் இறங்குவீர்களா? என்று கேட்கிறீர்கள். இறங்க வேண்டுமா, இல்லையா என்று மக்கள் சொல்ல வேண்டும். இறங்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்து விட்டால், வேறு வழியில்லை. நான் படப்பிடிப்புக்கு சென்றபோது, ஒரு கிராமத்தில் 70 ஆண்டுகாலமாக குடிநீர் இல்லாமல் இருக்கிறது என்பதை பார்க்கிறபோது அசிங்கமாக உள்ளது. அதுபோல் இல்லாமல் இருந்தால் நல்லது. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.