சிவகங்கை
நிலவின் தென்துருவத்துக்கு சிவசக்தி என பெயர் வைத்ததில் தவறில்லை-கார்த்தி சிதம்பரம் எம்.பி.பேட்டி
|நிலவின் தென்துருவத்துக்கு சிவசக்தி என்று பெயர் வைத்தது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
காரைக்குடி
நிலவின் தென்துருவத்துக்கு சிவசக்தி என்று பெயர் வைத்தது தவறில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
பேட்டி
காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷயத்தில், உத்தரபிரதேசத்தில் உண்மையான ஆட்சி இருக்குமேயானால் தன்னையே சாமியார் என்று கூறிக் கொள்ளும் அந்த மனிதரை கைது செய்து இருப்பார்கள். அங்கு நடப்பது புல்டோசர் அரசாங்கம். அவர்களிடம் சட்டபூர்வமான நடவடிக்கை எதிர்பார்ப்பது வீண்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய சனாதன ஒழிப்பு மேடையில் பேசியதை நான் கூர்மையாக கேட்டேன். அவர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் சொன்னாரே தவிர சனாதனத்தை பின்பற்றுபவர்களை, அல்லது ஒரு வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களை, அல்லது கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை.
உதயநிதி ஸ்டாலின் கருத்தை வரவேற்கிறேன்
தமிழ்நாட்டில் சனாதனம் என்று சொன்னாலே சாதி அடிப்படையில் உள்ள பாகுபாடைத் தான் குறிக்கிறது. இந்த சாதிய பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று அண்ணா, பெரியார். காமராஜர் போன்றோர் 70 ஆண்டுகளாக போராடினார்கள். இவர்களது கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் அந்த மாநாட்டில் கூறியுள்ளார். அவர் கூறியதை நான் முழுமையாக வரவேற்கிறேன். அவரது கருத்தைத் திருத்தி மாற்றி கூறுபவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தவறில்லை
இஸ்ரோவை இந்தியாவில் உள்ள அனைவருமே சொந்தம் கொண்டாடலாம். இதை பா.ஜனதாவினர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. இது மொத்த விஞ்ஞானிகளுக்கும் இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி என்று தான் நான் கூறுவேன். நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி என்று பெயர் வைத்தது தவறு என்று நான் கூற மாட்டேன். அன்றைக்கு இருக்கும் அரசுக்கு பெயர் வைக்க உரிமை உண்டு. சீமான் பரபரப்பாக கருத்துகள் சொல்லும் ஒரு அரசியல்வாதி. அவருக்கென்று நிரந்தர கொள்கைகள் ஏதும் சமுதாயம் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ இல்லை. அவர் இருக்கும் வாக்கு வங்கி தற்காலிக இடைநிலை வாக்கு வங்கி. அவர் ஒரு ஊடக உணர்வுக்கானவரே தவிர அரசியல் சக்தியாக நான் அவரை பார்க்கவில்லை.
ஒரே தேர்தல் ஏற்கமுடியாது
ஒரே நாடு ஒரே தேர்தல் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியல் அமைப்பில் நிறைய திருத்தம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் நிரந்தரம் என்று ஏதும் கிடையாது. ஒரு அரசாங்கம் உருவாகி பின் அந்த அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை என்றால், அந்த 5 ஆண்டும் அதே அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்யுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சியின் கீழ் ஆட்சி நடக்குமா? இவர்கள் கண்துடைப்புக்காக ஒரு கமிட்டியை அமைத்துள்ளார்கள். இவர்கள் விபரீத முடிவு எடுப்பார்கள் என்பதில் எனக்கு வியப்பு ஒன்றும் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அடிக்கடி தேர்தல் வருவதை வரவேற்கிறேன்.
அவ்வாறு வருவதால் தான் மக்களின் மனநிலை என்ன என்பது தெரிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.