தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
|வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளியை முன்னிட்டு தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் நடத்திய 'விபத்தில்லா திபாவளி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவற்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளியன்று தீ விபத்து மூலம் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் தீக்காயங்களுக்கான மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் வரை டெங்கு பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.