தாம்பரம், பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை...!
|பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்தனர். மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். தென் மாவட்டத்தில் இருந்து அதிக வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால் தாம்பரம், பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை. அரசுப் பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் வழியாகவும், ஆம்னி பஸ்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்ட சாலை வழியாகவும் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால் இந்தாண்டு பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம், பெருங்களத்தூர், ஓட்டேரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.