< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை -வைகோ பேட்டி
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை -வைகோ பேட்டி

தினத்தந்தி
|
28 Sept 2023 2:08 AM IST

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று, சென்னை அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழகம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பது குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். இதற்காகத்தான் வந்தேன். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வைகோ அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடர்கிறதா?

பதில்:- தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன்.

எந்த சலசலப்பும் இல்லை

கேள்வி:- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறதே?

பதில்:- இங்கு எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல், நீரோடை போகிற மாதிரி செல்கிறது.

கேள்வி:- அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அவர்கள் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.

கேள்வி:- வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு உள்ளதா?

பதில்:- அதுபற்றி நாங்கள் இன்னும் பேசவே இல்லை.

பெரிய அளவில் பாதிப்பு

கேள்வி:- தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதா?

பதில்:- மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். நமக்கு 8 எம்.பி. தொகுதிகள் குறையலாம். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிகமாக கூடும். அப்படி வரும்போது, இந்தியாவின் மொத்த வரைபடத்தில் நம்முடைய எண்ணிக்கை குறையும்போது, அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.

கேள்வி:- காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்பட எல்லாருமே ஒன்று சேர்ந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவர்களுக்கு வேறு வழியில்லை. அதனால் ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கர்நாடகாவில் அவமரியாதை செய்கிறார்களே?

பதில்:- நாம் அமைதியாக இருக்கிறோம். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. அதனால் அமைதியாக இருக்கிறோம்.

எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்

கேள்வி:- 'இந்தியா' கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் தொடர்கிறதா?

பதில்:- ஆமாம். கூட்டணியில் தொடருகிறோம்.

கேள்வி:- திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக கூட்டணியில் இருக்கிறார்களா?

பதில்-: எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

கேள்வி:- திருமாவளவனுக்கு அ.தி.மு.க. தரப்பில் தூது விடுவதாக சொல்கிறார்களே?

பதில்:- அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்