புதுக்கோட்டை
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அவசியமில்லை
|வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அவசியமில்லை எனவும், அறிவியல் ரீதியான தடயங்களின் பரிசோதனை முடிவு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் ஒரு நபர் ஆணைய ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தார்.
வேங்கைவயல் வழக்கு
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மே மாதம் 6-ந் தேதி வேங்கைவயல் வந்து விசாரணை நடத்தினார். மேலும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அதனை தொடா்ந்து 2-ம் கட்டமாக அவர் நேற்று புதுக்கோட்டை வந்தார். இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை திருப்தி
அதனை தொடா்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவியல் ரீதியான தடயங்களுக்காக டி.என்.ஏ. பரிசோதனை, குரல் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். தடயவியல் ஆய்வகத்தில் இருந்து இந்த பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வரவில்லை. வழக்குகளின் வரிசை அடிப்படையில் ஆய்வகத்தில் பரிசோதனைகள் செய்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதன்படி வேங்கைவயல் வழக்கு தொடர்பான பரிசோதனை முடிவு அறிக்கை வந்த பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் முடிவும் வந்த பிறகு தான் அடுத்தது தெரியவரும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 50 பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது.
நடைமுறைகள்
வேங்கைவயலுக்கு தற்போது குடிநீர் இறையூர் கிராமத்தில் ஒரே தொட்டியில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் அடுத்தக்கட்டமாக குடிநீர் தொட்டியில் பம்ப் ஆபரேட்டரின் பணி என்ன? அவரது பணியை சரியாக செய்தாரா? என கேட்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை முறையாக பராமரித்து கண்காணிப்பது தொடர்பாக ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா? என கேட்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டிகளை பராமரிக்க நடைமுறைகள் உள்ளது. இதனை அவர்கள் பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாக சென்று மக்களிடம் விசாரிக்க இப்போதைக்கு தேவையில்லை. எனது விசாரணை அறிக்கையை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் கால அளவு கூடலாம்.
சி.பி.ஐ.க்கு மாற்ற...
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முகாந்திரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்கிறீர்கள். இப்போதைக்கு ஒன்றுமில்லை. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரும் வரை எதுவும் சொல்ல முடியாது. குடிநீர் தொட்டிகளை பராமரிப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றினால் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கலெக்டா் மெர்சி ரம்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் உடன் இருந்தனர்.