"காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர்கள் தலையீடு தேவையில்லை"- சரத்குமார் பேட்டி
|காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர்கள் தலையீடு தேவையில்லை என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
திருச்சி,
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.
நடிகர்கள் தற்போது எல்லா மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள்தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான். கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை. இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை." இவ்வாறு அவர் பேசினார்.