< Back
மாநில செய்திகள்
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாநில செய்திகள்

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தினத்தந்தி
|
20 Dec 2023 2:59 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமான இடங்களில் இன்னும் வெள்ளம் வடிந்தபாடில்லை. நெல்லை, தூத்துக்குடியில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையை சேர்ந்த வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக அரசு சார்பிலும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை; திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். மழை பாதித்த பகுதிகளில் மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்கள் சேத மதிப்பீடு நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்