< Back
மாநில செய்திகள்
விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை  இயக்க தடை இல்லை - தமிழக அரசு
மாநில செய்திகள்

விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு

தினத்தந்தி
|
22 Jun 2024 1:31 PM IST

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

"தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழகத்துக்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை பாண்டிச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.

மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழகத்துக்கு எந்த ஒரு வரியும் செலுத்தாமல் தமிழகத்துக்குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும். மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் பல தமிழக மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும்பொழுது விதிகளை மீறி தமிழகத்துக்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

இவ்வகை ஆம்னி பஸ்களும் தமிழகத்துக்கு எந்த வரியும் செலுத்துவதில்லை. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களால் அரசுக்கு, பஸ் ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது.

முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னிப் பேருந்துகளுக்கு மேலாக தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து பேருந்துகளின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்